Saturday, August 22, 2015

சோளகம்பட்டி முட்புதர்க் காடு

காஞ்சியைப் போலவோ நெல்லையைப் போலவோ தஞ்சை ஏரிகளின் மாவட்டமல்ல. அதன் கிழக்கு பகுதி முழுதும் கிளை விரித்திருக்கும் காவிரி, நீர் வளத்தைப் பெருக்கி வைத்திருப்பதால் ஏரிகளின் தேவை அங்கில்லை. ஆனால் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் - காவிரி கிளை விரிக்காத இடத்தில் - ஏரிகள் உள்ளன. ராஜராஜ சோழன் காலத்திலும் இப்பகுதி 'ஏரியூர்' நாடு என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

பறவை அவதானிப்புக்காகத் தான் அந்த ஏரிகளின் பக்கம் என் பயணத்தைத் தொடங்கினேன். குடியரசு நாளன்று சுரக்குடிப்பட்டி ஏரிக்கு செல்வதெனத் திட்டமானது. நாலரைக்கெல்லாம் எழுந்து, தஞ்சை சென்று, திருச்சிராப்பள்ளி செல்லும் தொடர்வண்டியைப் பிடித்து, சோளகம்பட்டியில் இறங்கி, அரை கிலோ மீட்டர் நடையில் ஏரியை அடைந்தேன். மிகப் பெரிய அந்த ஏரி நிரம்பி வழிந்தது நல்லது தான் என்றாலும் எனக்கு ஏமாற்றம். நீர் மட்டம் குறைவாக இருந்தால் தான் நீர்ப் பறவைகள் வருகை தரும்.

எரிக் கரையோரமாகவே சிறிது தொலைவு நடந்த போது தான் அந்த 'முட்புதர்க் காடுகண்ணில் பட்டது. தஞ்சைப் பகுதியில், வேளாண் நிலங்களையும் சீமைக் கருவேலங்காடுகளையும் மட்டுமே அது வரையில் கண்டிருக்கிறேன். இயற்கையான ஒரு முட்புதர்க் காடு இருப்பது ஆச்சர்யம் தான்.

அடர்த்தி குறைவாக இருப்பதால் காட்டினூடே எளிதாக நடக்க முடிந்தது. அதிகமாகப் பரவிக் கிடக்கும் ஆவாரஞ்செடிகளைத் தவிர மற்ற மரஞ்செடிகளை அடையாளங்காண முடியவில்லை. வானம்பாடி, சின்னான், சிலம்பன் வகைப் பறவைகள் இங்கு அதிகமாக வசிக்கின்றன. இரண்டு தடவை இக்காட்டில் உலாத்தியதில் 54 வகைப் பறவைகளைக் கண்டிருக்கிறேன். எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என நம்புகிறேன். பல வித பட்டாம்பூச்சிகளும் இங்கு சுற்றித் திரிகின்றன.

அடர்ந்த மரங்கள் கொண்ட சோலைக் காடுகளும், இலையுதிர்க் காடுகளும் மட்டுமே காக்கப்பட வேண்டியவையன்று. புதர்க் காடுகளும், புல்வெளிகளும் காக்கப்பட வேண்டியவை தான். ஆனால் தற்காலத்தில் இவைகள் தான் மக்களின் அறியாமையால் வேகமாக அழிக்கப்படுகின்றன. இவை அழியும் போது, இவற்றையே வாழ்விடமாகக் கொண்ட உயிரங்களும் அழிகின்றன - மெதுவாக மனித இனமும் கூட.

புதர்க் காட்டில் மட்டுமே வசிக்கும் தவிட்டுக் குருவிப் பறவை

புதர்க் காட்டில் ஓர் ஆவாரஞ்செடி

சோளகம்பட்டி முட்புதர்க் காட்டினை, சுரக்குடிப்பட்டி ஏரியும் ஒரு வாய்க்காலும் (இது உய்யக்கொண்டான் வாய்க்காலா? என்பது என் சந்தேகம்) சூழ்ந்திருக்கிறது. இது யாருக்கு சொந்தமான இடம் என்பது தெரியவில்லை. வனத்துறையிடம் ஒப்படைத்துப் பாதுகாக்கப்பட்டால், சில உயிரனக்களின் வாழ்விடங்கள் காக்கப்படும்.

சோளகம்பட்டி முட்புதர்க் காட்டினில் நான் கண்ட பறவைகளின் பட்டியல்...

சோளகம்பட்டி முட்புதர்க் காட்டினை மேலும் ஆராய்வேன்.

1 comment: