Wednesday, August 26, 2015

கழுமரம்

கழுவேற்றுதல் - பழங்காலத்து தண்டனைகளிலேயே கொடூரமானது. அக்கொடூரச் செயல் பற்றி எழுதுவதற்கும் மனம் வரவில்லை. இருப்பினும்... கூர்மையாக சீவி, நிறைய எண்ணெய் தடவப்பட்ட ஒரு மரமே கழுமரம் என்னும் கொலைக் கருவி. அக்கழுமரத்தில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள். கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். இதுதான் கழுவேற்றுதல்.

7ம் நூற்றாண்டில், சைவ மதத்தினரின் மதவெறியாட்டத்தால் ஆயிரக்கக்கான சமண, புத்த மதத்தினர் இவ்வாறு கழுவேற்றப்பட்டார்கள். அவர்கள் பெருமையோடு செதுக்கி வைத்த சிற்பங்களும், தீட்டிய ஓவியங்களுமே இதற்கு சாட்சியாகத் திகழ்கின்றன.

சமணர்கள் கழுவேற்றப்படும் சிற்பம் - தாராசுரம் கோவில்

200 - 300 ஆண்டுகள் முன்பு வரையிலும் கழுவேற்றும் தண்டனை வழக்கத்தில் இருந்துள்ளது. கரிசல் எழுத்தாளர் கி.ரா அவர்கள் 'கோபல்ல கிராமம்' புதினத்தில் இத்தண்டனை பற்றி விரிவாக எழுதியுள்ளார். "உடனே கொல்லுகிற முறை, பல நாள் கழித்து வேதனையால் துடித்து சாகும் முறை, உடம்பில் எந்த இடத்தில் குத்தி எந்த இடத்தில் வாங்குவது என கழுவேற்றத்தில் பல முறைகள் உண்டு", என்கிறார் கி.ரா.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ஈரோட்டில் அவர் பார்த்த ஒரு கழுமரத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். "அநேகமாக நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் இங்கே மட்டுமே கழுமரம் இருக்கிறது", என்கிறார் அவர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கோவில்பட்டிக்குப் பக்கத்தில் நள்ளி என்னும் ஊருக்கு என் குல தெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே ஊருக்கு வெளியே இருக்கும் இன்னொரு கோவிலில் கழுமரம் போன்றத் தோற்றமுடைய, பீடத்தில் வீற்றிருந்த தெய்வத்தைக் கண்டேன். சந்தனம் குங்குமம் இட்டு மாலைகளெல்லாம் அணிவிக்கப்பட்டிருந்தது. அது திருவிழா நேரமென்பதால், அருகில் சென்று பார்க்க முடியவில்லை.

கழுமரம் - நள்ளி

மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் அங்கு செல்ல நேரிட்டது. இது திருவிழா நேரமில்லை என்பதால், சுதந்திரமாக அதனருகில் செல்ல முடிந்தது. ஆறடிக்கும் குறைவான உயரம். ஆண்டாண்டு காலமாக மழையிலும் வெயிலிலும் நின்று கொண்டிருக்கிறது. தொட்டுப் பார்த்த போது அது மரத்தினால் ஆனது எனத் தெரிந்தது. அப்போதே உறுதி செய்துக் கொண்டேன் அது கழுவேற்றக் கொலைக்கருவியான கழுமரமென்று.


கழுமரம் - நள்ளி

கடவுளாக மாற்றம் பெற்றுள்ள கழுமரத்தின் தற்போதையப் பெயரைய் அறிய முடியவில்லை. இதில் கழுவேற்றப்பட்டவன் யார்? அவன் செய்த குற்றமென்ன? எப்போது கொல்லப்பட்டு கடவுளானான்? இக்கேள்விகளுக்கான விடை வரலாற்றிற்கு மட்டுமே தெரியும்.


Saturday, August 22, 2015

சோளகம்பட்டி முட்புதர்க் காடு

காஞ்சியைப் போலவோ நெல்லையைப் போலவோ தஞ்சை ஏரிகளின் மாவட்டமல்ல. அதன் கிழக்கு பகுதி முழுதும் கிளை விரித்திருக்கும் காவிரி, நீர் வளத்தைப் பெருக்கி வைத்திருப்பதால் ஏரிகளின் தேவை அங்கில்லை. ஆனால் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் - காவிரி கிளை விரிக்காத இடத்தில் - ஏரிகள் உள்ளன. ராஜராஜ சோழன் காலத்திலும் இப்பகுதி 'ஏரியூர்' நாடு என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.

பறவை அவதானிப்புக்காகத் தான் அந்த ஏரிகளின் பக்கம் என் பயணத்தைத் தொடங்கினேன். குடியரசு நாளன்று சுரக்குடிப்பட்டி ஏரிக்கு செல்வதெனத் திட்டமானது. நாலரைக்கெல்லாம் எழுந்து, தஞ்சை சென்று, திருச்சிராப்பள்ளி செல்லும் தொடர்வண்டியைப் பிடித்து, சோளகம்பட்டியில் இறங்கி, அரை கிலோ மீட்டர் நடையில் ஏரியை அடைந்தேன். மிகப் பெரிய அந்த ஏரி நிரம்பி வழிந்தது நல்லது தான் என்றாலும் எனக்கு ஏமாற்றம். நீர் மட்டம் குறைவாக இருந்தால் தான் நீர்ப் பறவைகள் வருகை தரும்.

எரிக் கரையோரமாகவே சிறிது தொலைவு நடந்த போது தான் அந்த 'முட்புதர்க் காடுகண்ணில் பட்டது. தஞ்சைப் பகுதியில், வேளாண் நிலங்களையும் சீமைக் கருவேலங்காடுகளையும் மட்டுமே அது வரையில் கண்டிருக்கிறேன். இயற்கையான ஒரு முட்புதர்க் காடு இருப்பது ஆச்சர்யம் தான்.

அடர்த்தி குறைவாக இருப்பதால் காட்டினூடே எளிதாக நடக்க முடிந்தது. அதிகமாகப் பரவிக் கிடக்கும் ஆவாரஞ்செடிகளைத் தவிர மற்ற மரஞ்செடிகளை அடையாளங்காண முடியவில்லை. வானம்பாடி, சின்னான், சிலம்பன் வகைப் பறவைகள் இங்கு அதிகமாக வசிக்கின்றன. இரண்டு தடவை இக்காட்டில் உலாத்தியதில் 54 வகைப் பறவைகளைக் கண்டிருக்கிறேன். எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என நம்புகிறேன். பல வித பட்டாம்பூச்சிகளும் இங்கு சுற்றித் திரிகின்றன.

அடர்ந்த மரங்கள் கொண்ட சோலைக் காடுகளும், இலையுதிர்க் காடுகளும் மட்டுமே காக்கப்பட வேண்டியவையன்று. புதர்க் காடுகளும், புல்வெளிகளும் காக்கப்பட வேண்டியவை தான். ஆனால் தற்காலத்தில் இவைகள் தான் மக்களின் அறியாமையால் வேகமாக அழிக்கப்படுகின்றன. இவை அழியும் போது, இவற்றையே வாழ்விடமாகக் கொண்ட உயிரங்களும் அழிகின்றன - மெதுவாக மனித இனமும் கூட.

புதர்க் காட்டில் மட்டுமே வசிக்கும் தவிட்டுக் குருவிப் பறவை

புதர்க் காட்டில் ஓர் ஆவாரஞ்செடி

சோளகம்பட்டி முட்புதர்க் காட்டினை, சுரக்குடிப்பட்டி ஏரியும் ஒரு வாய்க்காலும் (இது உய்யக்கொண்டான் வாய்க்காலா? என்பது என் சந்தேகம்) சூழ்ந்திருக்கிறது. இது யாருக்கு சொந்தமான இடம் என்பது தெரியவில்லை. வனத்துறையிடம் ஒப்படைத்துப் பாதுகாக்கப்பட்டால், சில உயிரனக்களின் வாழ்விடங்கள் காக்கப்படும்.

சோளகம்பட்டி முட்புதர்க் காட்டினில் நான் கண்ட பறவைகளின் பட்டியல்...

சோளகம்பட்டி முட்புதர்க் காட்டினை மேலும் ஆராய்வேன்.

Wednesday, August 19, 2015

இளங்கோவடிகள் - ஓர் பறவை ஆர்வலர்

பறவைகளைப் பார்த்தலும், பார்த்தப் பறவைகளைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தலும் இன்று சிறந்த பொழுதுபோக்காக வளர்ந்துவருகிறது. ஆனால் இளங்கோவடிகள் கிட்டத்தட்ட 1700 ஆண்டுகளுக்கு முன்பே பறவைகளைப் பார்த்துப் பட்டியலிட்டிருக்கிறார்.
கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் புகாரிலிருந்து மதுரை செல்ல, காவிரிக் கரையோரமாக நடந்து வருகின்றனர். அப்போது அங்கே, வளமிக்க மருத நிலத்தில் குரலெழுப்பியப் பறவைகளை சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் பட்டியலிடுகிறார்.
"கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புறாவும்"
-> கம்புள் கோழி - White-breasted Waterhen
-> நாரை - Asian Open-bill / White Stork / Painted Stork
-> செங்கால் அன்னம் - புள்ளி மூக்கு வாத்து (Indian Sopt-billed Duck)
-> பைங்கால் கொக்கு - மடையான் (Indian Pond Heron)
-> கானக்கோழி - கானாங்கோழி (Watercock)
-> நீர்நிறக் காக்கை - நீர்க் காகங்கள் (Little & Indian Cormorants)
-> உள்ளு - உள்ளான் வகைப் பறவைகள் (All inland species of sandpipers / plovers / snipes)
-> ஊரல் - முக்குளிப்பான் (Little Grebe)
-> புள்ளு - சிகப்பு மூக்கு ஆள்காட்டிக் குருவி (Red Wattled Lapwing)
-> புறா - மணிப்புறா (Spotted Dove)?
ஆகா! இளங்கோவடிகளின் பறவைப் பட்டியலை ebirdல் checklist ஆகப் பதிவிடலாமே!! Birdwatchers அனைவருக்கும் முன்னோடி இளங்கோவடிகள்!!!
நன்றி: "தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்" by முனைவர் க.ரத்னம்