Saturday, August 24, 2013

கங்காதரரும், விண்வெளியும்

ங்காதரரைத் தெரியுமா உங்களுக்கு? நான் கேட்பது கங்கை நதியைத் தன் ஜடாமுடியில் கட்டிக் கொண்ட சிவனின் வடிவமான கங்காதரரை. சிவன் கோவில்களில் சிற்ப வடிவில் இவரைக் கண்டிருக்கலாம், ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள 12 நூற்றாண்டுகள் பழமையான கங்காதரர் உங்களுக்காக...

கங்காதரர்
நடுநாயகமாக, முயலகன் என்னும் அரக்கன் மேல் ஒரு காலை வைத்தவாறு ஒய்யாரமாக நிற்பவர் தான் கங்காதரர். அவர் இடது கையினால் தன் ஜடாமுடியின் ஒரு திரியைப் பிரிக்க, கங்கா தாவி வந்து அதனுள் புகுந்து கொள்கிறாள். அவருக்குப் பக்கத்தில் நிற்கும் பார்வதி இக்காட்சியை வியந்து பார்க்கிறாளோ? இந்த சிற்பக் காட்சியில் பங்குபெறும் மற்றவர்கள் கங்காதரின் வலது காலுக்கு அருகில் நின்று சாமரம் வீசும் ஒரு சிவகணம், சிவகணத்தின் தலைக்கு மேலிருக்கும் பாம்பு மற்றும் கங்காதரரின் தலைக்கு அருகில் பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டி உட்கார்ந்திருக்கும் நாய்.

கங்காதரரின் சிற்பத்தில் நாய்க்கு என்ன வேலை? கங்காதரரின் கதையைக் கூறும் புராணங்களில் நாய் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. அப்படியானால் இந்த மர்ம நாய் எதை குறிக்கிறது? இந்த நாய் ஆய்வாளர்களுக்கேப் புரியாதப் புதிராகத் தான் இருக்கிறது. ஆனால் இதற்கு வானவியலோடு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கிரேக்கப் புராணங்கள், வேட்டைக்காரனாக சித்தரிக்கும் 'ஓரியன்'(Orion) விண்மீன் தொகுதியை நம்மவர்கள் நடராஜரின் விண்வெளி தாண்டவமாக சித்தரிக்கிறார்கள். ஓரியனை கங்காதரராகவும் சித்தரிக்கலாம் (இருவரும் சிவனின் வடிவங்கள் தானே!). ஓரியனின் காலடியில் இருக்கும் 'லெப்பஸ்'(Lepus) விண்மீன் தொகுதி முயலின் வடிவத்தைக் கொண்டது. இதை கங்காதரின் காலடியில் இருக்கும் முயலகனாகக் கொள்ளலாம். நமது சூரிய மண்டலம் அமைந்திருக்கும் பால்வெளி அண்டத்தின்(Milky Way Galaxy) ஒரு பகுதி, ஒரு ஒளிரும் மேகம் போல ஓரியனின் தலைக்குப் பக்கத்தில் தெரியும். நம்மவர்கள் இதைத் தான் ஆகாய கங்கை என்கிறார்கள். இதை கங்காதரரின் தலையில் இறங்கும் கங்கையாகக் கொள்ளலாம்.



ஓரியனின் வலது பக்கத்தில் பெரிய நாய்(Canis Major), சிறிய நாய்(Canis Minor) என இரண்டு நாய் விண்மீன் தொகுதிகள் இருக்கின்றன. சிற்பத்தில் உள்ள நாய் கங்காதரரின் தலைக்குப் பக்கத்தில் இருப்பதால் அதை ஓரியனின் தலைக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய நாய் விண்மீன் தொகுதி எனக் கொள்ளலாம்.

கங்காதரர் சிற்பம் பழங்கால மக்களின் வானவியல் அறிவின் பிரதிபலிப்பா? இருக்கலாம். ஆனால், திருச்சியில் இருக்கும் இன்னொரு பல்லவர் கால கங்காதரர் சிற்பத்தில் இருக்கும் நாய் அவரது இடது பக்கத்தில் இருக்கிறது. பல்லவர், பாண்டியர், ராட்டிரக்கூடர்(Rashtrakutha) கால சிற்பங்களில் இடம் பெற்றிருக்கும் இந்த நாய் திடீரென சோழர் கால கங்காதரர் சிற்பங்களில் காணாமல் போய் விடுகிறது.

நன்றி: 'தமிழக வானவியல் சிந்தனைகள்' by முனைவர் ப. ஐயம்பெருமாள்

Sunday, May 5, 2013

ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை

சோழப் பேரரசு காலத்தியத் தலை சிறந்த தமிழ் புலவர்களுள் ஒருவரான 'கவிச் சக்ரவர்த்தி' ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படையை (சமாதி) நான் தேடிச் சென்றப் பயணக் கட்டுரை, கீற்று வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசித்துக் கருத்தளியுங்கள். வெளியிட்ட கீற்றுக்கு நன்றி.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23692:2013-04-28-16-37-26&catid=38:tamilnadu&Itemid=121

Sunday, April 14, 2013

சுஜாதாவின் 'வசந்த் வசந்த்'ம் உக்கல் 'ராரா கிணறு'ம்



சுஜாதா அவர்கள் எழுதிய 'வசந்த் வசந்த்' படித்திருக்கிறீர்களா? மிகவும் விறுவிறுப்பான நாவல். அவருடைய 'நைலான் கயிறு'க்குப் பின் நான் படித்த இரண்டாவது துப்பறியும் நாவல். பூனே வரை ரயிலில் தனியாகப் பயணம் செய்த போது நேரத்தைக் கொல்ல வாங்கிச் சென்றது. எதற்காக வாங்கப்பட்டதோ அப்பணியை செவ்வனே செய்தது அந்நாவல். நான் ஒரே நாளில் படித்து முடித்த ஒரே நாவலும் இது தான்.


'வசந்த் வசந்த்' கதையின் மையமே ஒருப் பழங்காலக் கிணறு தான். 'ராஜராஜன் கிணறு' (ராரா கிணறு) எனப்படும் அக்கிணற்றினால் நடக்கும் அடுக்கடுக்கானக் கொலைகள், அக்கிணற்றின் ரகசியம் தங்கப் புதையலா அல்லது வேறேதும் பொருளா எனத் துப்பறியும் கணேஷ், வசந்தின் விசாரணைகள் என ஸ்வாரஸ்யமாக செல்லும் அக்கதை.

கதையில் வரும் ராஜராஜன் கிணற்றைப் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்த போது அதைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே கிணறே ஒரு கற்பனையாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன். பல மாதங்கள் உருண்டோடிய பின், சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய சதாசிவ பண்டாரத்தாரின் 'கல்வெட்டும் அதன் உண்மைகளும்' என்ற புத்தகத்தில் ராஜராஜன் கிணறைப் பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியடைந்தேன். கதையில் வருவதைப் போலவே, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பெருவழியில் 'கூழமந்தல்' என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கும் 'உக்கல்' என்னும் கிராமத்தில் அந்த கிணறு இருப்பதாகக் கட்டுரை தெரிவித்தது.

கிணறு இருக்கும் இடம், என் பணியிடமான‌ செங்கல்பட்டிற்கு அருகிலே தான் என்பதால் அதனை சென்று பார்த்து வர உடனே திட்டம் தீட்டினாலும் சில வாரங்களுக்குப் பின் தான் நேரம் சரியாய் அமைந்தது. கூடுவாஞ்சேரியில் எட்டரை மணிக்கு கிளம்பிய நான், செங்கல்பட்டு - உத்திரமேரூர் - கூழமந்தல் - உக்கல் என்று சென்றடைய பன்னிரண்டரை ஆகியிருந்தது. பயண தூரம் குறைவு தான், ஆனால் பேருந்துக்கும் ஆட்டோவுக்கும் காத்திருந்த நேரம் அதிகம்.

புவன மாணிக்க விஷ்ணுகிரகம் -
உக்கல்
ராராஜன் காலத்தில் 'விக்ரமாபரண சதுர்வேதி மக்கலம்' என அழைக்கப்பட்ட உக்கலில் ராஜராஜன் கிணறு என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. கிணறு இருக்கும் 'புவன மாணிக்க விஷ்ணுகிரகம்' என்னும் பெயருடைய பெருமாள் கோயிலைக் கேட்டால் சரியாக வழி சொல்கிறார்கள். அதுவொரு பழங்கால கோயில் என்று காட்டிக்கொள்ள, முழுவதும் கல்வெட்டுகளைத் தாங்கியிருக்கும் அடித்தளமும் சில சிதைந்த மண்டபங்களும் மட்டுமே மீதமுள்ளன.  

கல்வெட்டுகளைத் தாங்கி நிற்கும் அடித்தளம்

கோயிலில் கண்ணயரப் படுத்திதிருந்த உள்ளூர்காரர் ஒருவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவருக்கு கோயிலைப் பற்றின விஷயங்கள் சிலப்பலத் தெரிந்திருந்தன. அங்குள்ள கல்வெட்டு செய்திகளில் ஒன்றைப் பற்றி கூட சொல்லி என்னை அசத்தினார். அவரிடம் நம் ராரா கிணற்றைப் பற்றி கேட்க (அவருக்கும் கிணற்றின் பெயர் தெரியவில்லை), இரண்டு மாதங்களுக்கு முன் தான் கிணற்றைத் தூர்த்து, மண்ணையும் கோயில் கருங்கற்களையும் சேர்த்து மூடினார்கள் என்று குண்டைத் தூக்கிப் போட்டார். என் அதிர்ஷ்டத்தை நொந்துக்கொள்ள வேண்டியது தான், ராரா கிணறு நான் அங்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன் தான் அழிக்கப்பட்டிருக்கிறது.

ராரா கிணறு இருந்த இடம். இப்போது அது இருந்த சுவடு கூட இல்லை
ராஜராஜன் கிணறு - இது ராஜராஜ சொழனின் ஆட்சிக்காலத்தில், அவரது பணிமகன் கண்ணன் ஆரூரன் என்பவரால் அமைக்கப்பட்டு தண்ணீர் இறைப்பதற்காக விடப்பட்டிருக்கிறது. இச்செய்தியை கோயில் கல்வெட்டு சொல்கிறது. அதுமட்டுமல்லாமல் கிணற்றில் நீர் இறைப்பவனுக்கும், மண்பாண்டங்கள் தருபவனுக்கும் இவ்வளவு நெல் கூலி, கிணறு பழுதடைந்தால் அதை சரி செய்ய இவ்வளவு நெல் 'புதுக்குபுறம்' என்ற செய்திகளையும் சொல்கிறது.

கூழமந்தலில் இருக்கும் ராஜேந்திர சோழன் காலத்துக் கோயிலொன்றை நன்றாகப் பாதுகாத்து வரும் தொல்பொருள்துறையினர், அதற்கு பக்கத்திலேயே இருக்கும் அதனை விட பழமையான உக்கல் கோயிலையும் கிணறையும் ஏன் பாதுகாக்கவில்லை என விளங்கவில்லை. எழுத்தாளர் சுஜாதா அவர்களும் தன் 'வசந்த் வசந்த்' உருவாக மிகவும் உதவிய பண்டாரத்தாரின் கட்டுரைக்கு நாவலின் முன்னுரையில் ஒரு நன்றியை சொல்லியிருக்கலாம்.

பெருவழி - சாலை
பணிமகன் - வேலைகாரன்
புதுக்குபுறம் -Cost for Repairing
இவை ராரா கிணற்றைப் பற்றின கல்வெட்டில் வரும் செந்தமிழ் சொற்கள்.

உக்கல் கோயிலைப் பற்றியும், புகைப்படங்களையும் இங்கே காணலாம்.